செவ்வாய், 12 மே, 2015

        தமிழ்நாட்டில் இனி எல்லாம் ஜெயமா.....இல்லை ஜெ-மயமா....!

தூசுகளும்,துரும்புகளும்;
முதலில் புரட்சித்தலைவிக்கு வாழ்த்துக்கள்....
தமிழகத்தில் ஒரு சில மாதங்களாக ஜெ-வை சுற்றிய சூறாவளியில் எட்டிப்பறந்த தூசுகளும்,எகிறிக்குதித்த துரும்புகளும் இனி என்ன செய்யப் போகின்றன.ஒன்று அம்மாவின் காலடியில் மடிந்து விடும்,இல்லை  இனி வரும் அரசியல் சுனாமியில் மறைந்து விடும் என்பதே உண்மை.
இரும்பு பெண்மணி;
ஒரே ஒரு பெண்மணி,இரும்பு  பெண்மணி கடந்த 2014-ம் நாடாளுமன்ற தேர்தலில் ஒட்டு மொத்த தமிழகத்தையும் தன்னகத்தே வைத்திருந்தார்.அந்த மாபெரும் ஆதரவு இன்றளவும் இருந்து கொண்டுதான் இருக்கிறது.
அவர் வீட்டிலேயே  முடங்கிக்கிடந்த தற்போதைய சிறிது காலம் புள்ளப்பூச்சிகளும் கூட துள்ளிக்குதித்தது,குள்ளநரிக் கூட்டமெல்லாம் கூடிப்பேசி ஏளனமாய் சிரித்தது.எதிரிக்கு எதிரி நண்பன் என்ற ரீதியில் கூட்டணிக்கு அச்சாரமிடப்பட்டது.ஆனாலும் அனைத்து எதிரிகளும் ஓரணியில் நின்றாலும் எட்டமுடியாத உயரத்தில் இருப்பது ஜெயலலிதா என்கிற இரும்பு பெண்மணி என்பதை இப்போது காணமுடிகிறது.
அரசியல் களம்;
சில காலமாக பல காட்சிகள் அரங்கேறிக்கொண்டிருந்த தமிழக அரசியல் களம் தற்போது தலைகீழாய் மாறியிக்கிறது. தற்போதைய தமிழக அரசியல் களத்தில் நிச்சயமாக அதிமுக-விற்கு இணையான,போட்டியான அரசியல் கட்சி கிடையாது. எதிர்க்கட்சிகள் அனைத்தும் அசுர பலம் கொண்ட அதிமுக-வின் முன்னே பலவீனப்பட்டுத்தான்  நிற்கின்றன.இப்போது இருக்கின்ற ஆதரவும், அனுதாபமும் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு ஆட்சிக்கட்டிலில் அமரவைக்கும் என்பதே உண்மை.
ஊழல்;
ஊழல் என்பது அரசியலில் இரண்டறக் கலந்த ஒன்றாகிவிட்டது.ஆனால் அடுத்த ஐம்பது வருடம் கழித்து பிறக்கப் போகும் பேரக்குழந்தைக்கும் சொத்து சேர்த்து வைத்திருக்கும் கலைஞரை காட்டிலும் ஜெவின் சொத்து பத்தில் ஒரு பங்குதான்.இங்கே ஜெவும் சசியும் மட்டுமே,அங்கே ஒரு மாபெரும் கூட்டமே இருக்கிறது.ஆக பிசாசுக்கு பேய் எவ்வளவோ மேல் என்றுதான் எண்ணத்தோன்றுகிறது.
நீதிமன்றங்கள்.;
அம்மாவின் மீது தொடரப்பட்ட வழக்கும்,அதனுடைய 18 ஆண்டு கால விசாரணையும்,அதைத்தொடர்ந்து சிறப்பு நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தண்டனையும்,அதன்பிறகு கிடைத்த ஜாமீன்,குற்றவாளிகள் தரப்பில் தாக்கல் செயயப்பட்ட மேல் முறையீடு,இப்போது அவசர அவசரமாய் இந்த வழக்கை முடித்து தீர்ப்பு வழங்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டது...என்று வழக்கை  உன்னிப்பாக  கவனித்து பார்க்கும் போது,இந்தியா என்னும் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் நீதித்துறை கேளிக்கூத்தாகவோ அல்லது கேள்விக்குரியதாகவோதான்  உள்ளது என்பது புலனாகிறது.நம்முடைய அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ள அத்தனை ஓட்டைகளும் இந்த வழக்கில் பயன்படுத்தப்பட்டிருப்பதும் தெளிவாகிறது.
தீர்ப்பின் மீது குற்றம் சாட்டியவர்கள் சூழ்ச்சி,சந்தேகம் என்று விமர்சித்தாலும்,குற்றம் சாட்டப்பட்டவர்கள் சூது கவ்வியது,தர்மம் வென்றது என்று சூளுரைத்தாலும் கேள்விக்குரியதாகியிருப்பது என்னவோ நீதிமன்றங்களே,சந்தேகத்திர்க்குரியவர்களாகியிருப்பது என்னவோ நீதிபதிகளே.
என்ன தேவை;
எது எப்படியாக இருந்தாலும் இந்தியாவில் அனாதையாக கேட்பாரற்று கிடக்கும் தற்போதைய தமிழகத்திற்கு அம்மாவின் வருகையும் முதல்வர் பதவியும் வரவேற்க்கத்தக்கதே.அவர் உண்மையிலேயே தவறு செய்தாரா இல்லையா என்பது அவர் மனசாட்சிக்கு தெரியும்.மெய்யெனில் அதற்குப் பரிகாரமாய் இனி வரும் காலங்களில் தமிழக மக்களுக்கு நன்மைகள் மட்டுமே செய்வதற்கும்,பொய்யெனில் இந்தியாவின் அடுத்த பிரதமர் ஆவதற்க்கும் முயர்ச்சிக்கட்டும்.
பொருத்திருந்து பார்ப்போம் "தமிழ்நாட்டில் இனி எல்லாம் ஜெயமா..........இல்லை ஜெ-மயமா.........." !

இப்படிக்கு;-                                    
வஞ்சி.க.தங்கமணி.
மதுரை.  


ஞாயிறு, 18 ஜனவரி, 2015

                       தமிழ்(ழா )!

பாலூட்டி வளர்த்தது                
தாயென்றால் - எம்மை 
தாலாட்டி வளர்த்தது தமிழன்றோ!

 பார்போற்றும்  செம்மையான

மொழியென்றால் - எம்
தமிழுக்கு நிகர் வேறுண்டோ?


தேனைவிடச் சுவை
உண்டென்றால் - அது
பாற்கடல் தந்த அமுதன்றோ;

அதைவிடச் சுவை
எதுவென்றால்? - என்றும்
திகட்டாது தித்திக்கும் தமிழன்றோ!

ஐம்பெரும் காப்பியம் தந்த மொழி
எட்டுத்தொகை நூல் கொண்ட மொழி
பதினென் கீழ்கணக்கு உள்ள மொழி
இலக்கணம் இலக்கியம் சிறந்த மொழி!


பல்லாயிரம் ஆண்டுகள் பழமைதான்
படிக்க என்றும் இனிமைதான் - இதிலே 

கவிகளும் கதைகளும் அருமைதான்
வள்ளுவன் பாரதி எங்கள் பெருமைதான்!

நிறத்தில் நாங்கள் கருப்பாக
வீரத்தில் இருப்போம் நெருப்பாக
அறிவில்  என்றும் சிறப்பாக
வாழ்வோம் இவ்வுலகில் பொறுப்பாக!



அடிமைத்தனத்தை அறுத்திடுவோம்
சாதிய முறையை ஒழித்திடுவோம்
உயர்வுக்கு உன்னதமாய் உழைத்திடுவோம்
நாம் தமிழரென்றே -
இவ்வுலகிற்கு உணர்த்திடுவோம்! 




                                                                                   
                                                                  -எழுத்து -
                                                        வஞ்சி.க.தங்கமணி                




திங்கள், 3 டிசம்பர், 2012

அம்மாவின் கைப்பேசி!

கைப்பேசி வழியே.....

தங்கை-
தலைதீபவளிக்கென்று
இரண்டு சவரன் நகையும்,
பத்தாயிரம் பணமும் கேட்டாள்!

அக்கா-
முதல் தீபாவளி காணும்
தன் குழந்தைக்கு
தங்கத்திலே தோடும்,
வெள்ளியிலே கொலுசும் கேட்டாள்!

தம்பி-
கல்லூரி செல்லும் அவனுக்கு
தீபாவளி பரிசாக
புதிதாய் ஒரு மொபைல் கேட்டான்!

அப்பா-
வெளியூருக்கு செல்லும் போது
பந்தாவாக கட்டிக்கொள்ள
தங்கநிறத்தில் ஒரு வாட்ச் கேட்டார்!

அம்மா..........
"எங்கண்ணுக்குள்ளயே இருக்கிற சாமி"
"எப்படா கண்ணு ஊருக்கு வருவே?"
ஏக்கத்தோடும் கண்ணீரோடும்
என்னைக் கேட்டாள்!

நான்-
அடுத்த தீபாவளிக்கு என்றேன்
கனத்த இதயத்தோடு........!

எழுத்து-
வஞ்சி.க.தங்கமணி.

திங்கள், 3 மே, 2010

தோழா!

முயற்ச்சியை மூச்சிலே

கலக்கணும்,

உயர்வுக்கு உன்னதமாய்

உழைக்கணும்,

அவமானங்களை அடித்து

நொறுக்கணும்,

தோல்விகளை கொஞ்சம்

பொறுக்கணும்;





இரவு என்பது

நாளும் வரும்;

நேற்றிரவு நாளை வராது!



கரைந்துபோன நேரங்களை

மறந்துவிட்டு,

பறந்து போகும் காலத்தில்

விரைந்து செல்;

அங்கே வெற்றியென்னும் பூக்கள்

நிறைந்திருக்கின்றன!

உழைக்கும் கரங்களுக்காக

மலர்ந்திருக்கின்றன!



வாழ்க்கையில் வென்றால்

வரலாறு!

வாழ்க்கையை வென்றால்

சரித்திரம்!

வாழும்போது வரலாறாய் இரு,

வாழ்ந்தபின் சரித்திரமாவாய்!

ஞாயிறு, 28 மார்ச், 2010

கடைசி ஆசை!

என் மூச்சுக்காற்றாய்
உன்னை சுவாசித்தேன்;
என் மூச்சையே
நிருத்திவிட்டாயடி!

என் வாழ்க்கைத்துணையாய்
உன்னை யாசித்தேன்;
என் வாழ்க்கையை
முறித்துவிட்டாயடி!

என் உயிருக்கும் மேல்
உன்னை நேசித்தேன்;
இதோ-என் உயிரையும்
பறித்துவிட்டாயடி!

கடைசியாக ஒரு ஆசை....

உன் காலடித்தடங்களின்
கைப்பிடி மண்ணெடுத்து
என் கல்லறை சுவற்றுக்கு
கலப்படமாய் தந்துவிடு;
உன் பாதச்சுவடுகளில்
படுத்து உறங்குகிறேன்!